எந்திரனுக்கு ரஜினி இன்னும் சம்பளம் பெறவில்லை-கலாநிதி மாறன்
எந்திரன் படத்துக்காக இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பளமாகப் பெற்றுக் கொள்ளவில்லை ரஜினிகாந்த் , என்றார் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கலாநிதி மாறன் பேசியதாவது:
"ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவது இதுதான் முதல் முறை. அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. வைரமுத்து இனிமையான பாடல்களை எழுதியிருக்கிறார். விஞ்ஞானம் தொடர்பான பாடலையும் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக எழுதியிருக்கிறார். அவர் மகன் கார்க்கியும் பாடல் எழுதியிருக்கிறார்.
இசை பிரமாதமாக வந்திருக்கிறது. தமிழின் பக்கம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. முதல் முறையாக அவரது மகள் கதீஜாவும் இதில் பாடியிருக்கிறார்.
ஷங்கர் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக செய்பவர். சில டைரக்டர்கள் மாஸ் படம் இயக்குவார்கள். சில டைரக்டர்கள் கிளாஸ் படம் இயக்குவார்கள். ஷங்கர் இந்த இரண்டும் செய்பவர். கோலாலம்பூரில் டுவின் டவர் எப்படி தனித்துவத்துடன் நிற்கிறதோ அப்படி இந்திய சினிமாவில் ரஜினி நிற்கிறார். அந்த உயரத்தை எவராலும் எட்ட முடியாது. அவர் ஒரு சகாப்தம் (லெஜண்ட்).
'ஸ்டாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்!'
இந்த படத்துக்காக இரண்டு வருடம் உழைத்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும்போது ரஜினி என்னிடம் பேசினார். "எந்திரன் கண்டிப்பாக ஹிட் ஆகும். நாம சேர்ந்து பண்ணுவோம். என் சம்பளத்தைக்கூட இப்போது தரவேண்டாம் படம் முடிந்த பிறகு வாங்கிக் கொள்கிறேன்" என்றார். அவர் சொன்ன வார்த்தையை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். சம்பளமே கேட்கவில்லை. இதுதான் ஸ்டாருக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்.
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். அந்த இடத்துக்கு யாரும் வரப்போவதில்லை. பிறக்கப் போவதும் இல்லை. 'எந்திரன்' டீம் கடுமையாக உழைத்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவுக்கு தமிழனத் தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி...", என்றார் கலாநிதி மாறன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment